5

நவம்பர் 5, திங்கள், மாலை 6 மணி:

‘ஐய், அம்மா நானும் வரேன்.’ என்ற மகளிடம்

‘போ…போய் கை கால் அலம்பிட்டு வா. எத்தன தடவை சொல்லறது விளையாடிட்டு வந்தா நேரா போய் கை கால் கழுவ சொல்லி.

‘கொஞ்சம் இரு ம்மா. நானும் வந்துடறேன்.’ என்று ஓடிய மகளை பார்த்து தானாகவே புன்னகை பூத்தது.

‘அம்மா வந்துட்டேன்’ என்று கூறிக்கொண்டே மகள் வந்தவுடன் வேக வேகமாக வேலை நடந்தது.

‘அம்மா இது எந்த ஊர்?’

‘இது…நியூ கினியா (New guinea)’ என்றேன்.

‘அம்மா இது எந்த ஊர்?’

எனக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை, ரொம்பவே யோசிக்க வேண்டியதாயிற்று

‘ஹான்… கண்டுபிடிச்சிட்டேன்…ஜாவா’

‘அம்மா இது எந்த ஊர்?’

‘அட இது கிரீன்லாந்து’ என்று தயங்காமல் கூற முடிந்தது.

இப்படியே ஆடுத்த அரைமணிநேரத்தில் பல ஊர்களும், அதன் தலை நகரங்களும் கண்டுபிடித்து மகளுக்கு கூறினேன்.

‘சரி சரி..சீக்கிரம் போய் ஒருதடவை இன்னிக்கி கிளாஸ்ல சொல்லித்தந்ததை மறுபடியும் படிச்சிப் பாரு. அப்பா கொஞ்சநேரத்துல வந்துடுவாரு.’ என்று என் மகளை விரட்டிவிட்டு மற்றக்காரியங்களை முடித்தேன்.

நவம்பர் 5, திங்கள், மாலை 7.30 மணி:

காலிங்பெல் சத்தத்திலேயே வந்தது என் கணவர் என்று தெரிந்தது.

‘வாங்க. என்ன ரொம்ப சோர்வா இருக்கீங்க? ரெடியாகி வாங்க நிமிஷத்துல காபி கொண்டுவரேன்’ என்று கூறி தலைமறைவானேன் அடுக்களையில்.

மகள் படித்து முடித்து வரும் வரையில் ஹாலில் அன்றைய நிகழ்வுகளை பேசிக்கொண்டு இருந்தோம்.

நவம்பர் 5, திங்கள், மாலை 8.30 மணி:

‘அப்பா இனிக்கி நாங்க எந்த ஊர் எல்லாம் சுத்திப்பார்க்க போனோம்னு சொல்லுங்க’ என்று மகள் கேட்ட கேள்வியில் என் கணவருக்கு சிரிப்பு வந்தது.

‘உங்க அம்மாக்கே எந்த ஊருக்கு போவோம்னு நீங்க போறவரைக்கும் தெரியாது. என்னை கேட்டா நான் என்ன சொல்லுவேன். அதுவும் உங்க அம்மா புவியியல் (Geography) படிச்சியிருக்காங்கன்னே எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரியும்’ என்று என்னை பார்த்துக்கொண்டே மகளுக்கு பதிலளித்த சாமர்த்தியத்தை என்ன சொல்வேன்!!!

‘அப்ப சரி நானே இனிக்கும் சொல்லறேன்’ என்ற மகள்

அன்று கற்றுக்கொண்ட ஊர்களின் வடிவத்தில் வந்த சப்பாத்திகளை எங்கள் தட்டில் வைத்தாள்.

என்ன செய்ய எனக்கு சப்பாத்தி வட்டமாக வராதே! ஆனால், அதையும் இப்படி நல்ல கோணத்தில் பார்க்கலாம்!!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book