6

“பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து சுந்தர் பூரித்துப்போனார். இங்கு ஆரம்பித்த மகவைப் பற்றிய சுந்தரின் பெருமிதம் மகனின் வளர்ச்சியோடும் சேர்ந்து வளர்ந்தது.

“கண்ணா, ஜப்பான் தேசியக்கொடி எது? இந்தியா, அமெரிக்கா?” என்று நீண்ட பட்டியல்களை அடையாளம் காட்டும் அக்குழந்தை, லோகேஷ்.

“என்னங்க, இன்னிக்கி நீங்க வரும்போது அந்த ‘ஈஸி இங்கிலீஷ்’ சீடி வாங்கிகிட்டு வாங்க. அது இந்த சின்ன வயசுலையே கேக்க கேக்க குழந்தை ஸ்கூல் போகும்போத அவனுக்கு எல்லாமே சீக்கிரம் புரியும், நல்லாவும் இங்கிலீஷ் பேசுவான்.” என்ற மனைவியிடம்

“கண்டிப்பா வாங்கிடறேன், அனு.” என்றான் சுந்தர்.

ஆறு வயது மகனுக்கு சுற்றிபோட்டு விட்டு “பாத்தீங்களா திருஷ்டிய. இந்த சின்ன வயசுலையே எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான் அப்படின்னு பாக்கறவங்க எல்லோரும் சொல்லிட்டாங்க. இதுல இவன் ஜூனியர் டான்சர் ப்ரோக்ராம்ல வர ஆரம்பிச்சிட்டா …ஹப்பா என்ன சொல்ல?” என்று தன் மனைவி கூறிக்கொண்டே சென்றதை ஆமோதித்து

“ஆம், நம்ப வீட்டுலேயே இவ்வளவு சின்ன வயசுல இப்படி யாருமே இருந்ததில்லை. நாம்ப இதுக்காக எவ்வளவு மெனக்கெடறோம்.”

‘ஒவ்வொன்றையும் கற்றுத்தரும் போதும் என்னையும் மறக்காமல் அறிமுகம் செய்யுங்க. உங்களைப் பார்த்து தான் அவன் படிப்பான். மற்றதெற்கெல்லாம் செலவு செய்யற மாதிரி இதுக்கு செலவு செய்யவேண்டாம். அவனோட வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியம்.’ என்று நான் கூறுவது ஊமையின் வார்த்தையானது.

‘இவ்வளவும் கற்றுத்தரும் நீங்கள் எப்படி என்னை மறக்கலாம்?’ என்ற என் ஆதங்கம் அவர்கள் கவனத்தில் பதியவில்லை. ‘என்னை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை, இனியும் வருவேனா’ என்ற சந்தேகத்தில் கேட்டதும் அவர்களின் காதில் விழாமல் காற்றோடு கரைந்தது.

மகன் இந்த பத்து வயதில் பல போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பெயரோடும் புகழோடும் இருப்பது பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் சாதித்த உணர்வும் தந்தது. “கண்ணா, போன வாரம் நீ தொகுத்து வழங்கற நிகழ்ச்சியை பாத்துட்டு வேற டிவியில் இருந்தும் ஒரு ப்ரோக்ராம் பண்ண கேட்டாங்க. இப்போதைக்கு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தான் ப்ரீ டைம் இருக்கு. அதுனால அந்த ப்ரோக்ராம் அந்த நேரத்துல பதிவு பண்ணறதா இருந்தா நாம்ப ஒத்துக்கறோம் அப்படின்னு சொல்லிட்டேன். நீ என்ன சொல்லற? படிப்புக்கு எந்தவிதமான தடங்கலும் வந்துட கூடாது.”

“சரி பா, நீங்க ஒத்துக்கோங்க, அந்த டைம் சரின்னு சொன்னா. அப்புறம் நான் அன்னிக்கே சொன்னேனேப்பா ஸ்கூல்ல நேச்சர் கேம்ப் போறாங்க. நானும் போகட்டுமா?”

“எதுக்கு கண்ணா. அங்க என்ன இருக்கு வெறும் மரம் செடி கொடின்னு. இப்போ இருக்கற ப்ரோக்ராம்க்கும் கிளாஸ்களுக்கும் போறதுக்கே நேரம் இல்லை. இதுல ரெண்டு நாள் கேம்ப் போனா சரியா வராது.” என்று தடுத்த பெற்றோரை ஆமோதித்தான்.

‘இப்போ சுற்றுசூழலுக்கும் தூரம் ஆக்கிட்டீங்களே. எப்போதான் புரியும் நான் சொல்லறது. நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் நீங்க உங்க புள்ளைய வளர்க்கும் அழகை. ஆண்டவா. இவங்களை காப்பாத்து.’ என்ற என் வேண்டுதல் அந்த ஆண்டவனுக்கே கேட்டதோ? இல்லையோ?

வருடங்கள் உருண்டோடின, நானும் அக்குடும்பத்தில் அங்கத்தினராக இருந்தும் வெளிப்படையாக சேர்த்தியில்லை.

மகனின் வளர்ச்சியில் பெருமிதமும் கர்வமும் கொண்டு தங்கள் வாழ்வை வாழ்ந்த தம்பதி, இன்று மகன் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்ததைக் கண்டும் அடுத்திருந்து முன்புபோல் சந்தோஷிக்க முடியவில்லை.

“என்னம்மா இன்னிக்கும் உங்க மகன் வரலையா?”

“இல்லை சத்யா. லோகேஷுக்கு ஞாபகம் இருக்கானே தெரியல. ஐயாவ ஆஸ்பத்திரியில் சேர்க்கணும், ம்ம்ம். அவருக்கு முடியாம இருக்கும்போதாவது வருவான் அப்படின்னு நினைச்சேன்.” என்று தழுதழுத்த முதியவரை பார்த்து

“அட..என்னம்மா இதுக்கு போய் கலங்கிகிட்டு. நான் தோட்டத்துக்கு தண்ணி ஊத்திட்டு வரேன். நீங்க ஐயாவ தயாராக்குங்க.” என்று சென்ற தோட்டக்காரனைப் பார்த்தபோது வயதில் முதிர்ந்த அனுவிற்கு புரிந்தது, நான், மனிதம் இருக்கிறேன் என்று.

ஆம்

“இவர்களுக்கு மனிதம் என்ற நான் இருப்பதை உணர இவ்வளவு காலம் ஆனது. இப்போதேனும் உணர்ந்தார்களே; ஆனால் இவர்கள் வளர்த்த மகவுக்கு புரிய எவ்வளவு காலமோ??????’

‘பேசவும், கணக்கும், பெயரும் புகழும் சம்பாதிக்க உதவும் கலைகளை கற்றுக்கொடுத்து வழிக்காட்டியவர்கள் தங்கள் மகனுக்கு மனிதனாக இருக்க வழிக்காட்ட வில்லை.’ என்ற என் ஆதங்கம் திரும்பவும் நான் மற்ற வீடுகளில் இவர்கள் வீட்டில் பட்ட ஆதங்கத்தை படாமல் இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுதல்.

“அன்று மரமும் செடியும் கொடியும் எதற்கு என்று தோன்றியது, ஆனால் இன்று மரம் செடி கொடிகளுடன் கூடிய இந்த வீடு, பல ஆண்டுகளுக்கு முன்னர் நல்லவிலை பின்னாளில் கிடக்கும் என்ற ஒரே காரணத்தினால் தாங்கள் அன்று வாங்கி போட்டதே தங்களின் இப்போதைய நிழலாகவும் துணையாகவும் மாறியது விந்தையே.இதன் உண்மை விலையும் இந்த முதுமையில் புரிந்தது! இப்போது மிகவும் நன்றாக புரிந்தது எதற்கு பெருமிதம் கொள்ளவேண்டும் வேண்டும் என்று; அப்போது பெருமிதமாக இருந்தது இப்போது இல்லை!” என்று பெருமூச்சுடன் எண்ணிய அனு வெளியே சொல்ல முடியாமல் ஊமையானாள், அன்று அவர்கள் வீட்டில் மனிதம் இருந்ததுபோல்.

‘நான் விதையாக இருப்பேன், உயிர்ப்புடன்! ஈரப்பதம் உள்ள நிலத்தில் முளைப்பதுபோல் மனதில் ஈரம் உள்ள மனிதனிடம் மனிதமாக இருப்பேன்.

பலகாலம் வறண்ட நிலமாக இருந்தாலும்கூட, மழைப்பொழிவு அந்த வறண்ட நிலத்திலும் புதைந்திருக்கும் விதையை முளைப்பிக்கும். மழைப்பொழிவுபோல் பெற்றோர்கள் இருந்தால் தங்கள் பிள்ளைகளின் உள்ளிருக்கும் மனிதம் என்ற விதை முளைக்கும்.’

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book