7

“அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்ததால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை.

வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள்.

கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத்திய பார்வையே என் மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று இன்று புரிந்தது.

“என்னப்பா தட்டு காலியானது கூட தெரியாம கையை வாயிக்கு கொண்டுபோறீங்க. ம்ச்..இப்படி இருந்தா எப்படி? நீங்களும் படுத்துட்டா ….” என்று எழுப்பிய மகனுக்கு தெரியுமா என் மனவோட்டம்?

மீண்டும் மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் இருந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்விற்கு தாவியது.

“என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க?” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் வந்த அறிக்கையை பார்த்து கேள்விகேட்டேன்.

“சார், அங்க பல பன்னாட்டு, உள்நாட்டு மருத்துகளையும் மனுஷங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறாங்க. சிலபேருக்கு சொல்லிட்டு அவங்க சம்மதத்தோடு மருந்தை போட்டாலும் முழுசா அதோட பக்கவிளைவுகளை சொல்லறதில்லை. அப்படியே அந்த மருந்தால் பாதிப்பு வந்தா மேற்கொண்டு அவங்களுக்கு சிகிச்சை அளிக்கறது இல்லை.”

“உனக்கு என்ன மேன் வந்தது. அவங்கதான் பணம் தராங்களே, அதுக்கு ஆசைப்பட்டு தானே சம்மதிச்சு வராங்க.”

“இல்லை சார். சிலருக்கு பணம் தரேன்னு சொல்லி ஆசை காட்டி கொண்டுவந்து டெஸ்ட் பண்ணறாங்க. அவங்ககிட்ட பணம் வாங்கற ஆளுங்க எல்லாமே ஏதோவொரு விதத்துல பணத்தட்டுப்பாடுல இருக்கறவங்க. அவர்களுடைய தேவையையும், அறியாமையையும் சாதகமா ஆக்கிகிட்டு இப்படி பண்ணறது என்ன நியாயம்? ஒரு பத்து பேருக்கு பணம் தந்தா யாருக்கும் தெரியாம ஒரு 15 – 20 பேருக்கு அவங்களுக்கு தெரியாமையே அந்த மருந்தை போடறாங்க. நம் மக்களும் டாக்டர தெய்வமாய் பாக்கறாங்க. அந்த நம்பிக்கையை இப்படி துர்உபயோகப்படுத்தி உயிரோட விளையாடலாமா? மிருகங்களுக்கு இப்படி தந்தாலே அதற்கென்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கு. அதை அவர்களின் நாட்டில் கடைப்பிடிக்கறவங்க இங்க இப்படி மனிதர்களிடம் நடக்கலாமா?”

“கூல் டவுன்… என்ன நீங்க இதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க? நீங்க என்னதான் ரிப்போர்ட் பண்ணாலும் அவங்களோட பணபலம், ஆள்பலம் இதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். பணம், பொருள் இப்படி எது வேணும்னாலும் கேளுங்க கிடைக்கும்.”

“எப்படி சார், நீங்களே இப்படி பேசறீங்க? மக்களுக்கு நல்லது பண்ணறோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு நாம் தான் திட்டங்களை போட்டு செயல் படுத்தறோம். ஆனா நாம என்ன பண்ணறோம்…பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா? …ச்சே…. மண்ணை அழிச்சோம் பசுமை புரட்சிங்கற பேருல நம்மோட தானியங்களையும் இயற்கை விவசாயத்தையும் பின்னுக்கு தள்ளிட்டோம். அதோட நிக்காம நீர் நிலைகளை அழிச்சோம், மலைகளை அழிச்சோம், மனிதர்களையும் அழிக்கறோம்..இப்போ. இப்படியே போனா எல்லாமே அழிஞ்சுபோய் கடைசியில் நாமே அழிவோம்.” என்ற சங்கர் என் கண்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தான்.

“எப்படியும் நீங்களோ நானோ அந்த ஹாஸ்பிடலுக்கு போகபோறதில்லை. யாரு எப்படி போனா உங்களுக்கு என்ன? நீங்க இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசறதுனாலதான் உங்களுக்கு அடிக்கடி வேற வேற எடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. நான் நீங்க இப்போ பேசினத பெருசா எடுக்கல. எப்படியும் என்னோட கையெழுத்து இல்லாம அந்த ரிப்போர்ட்டுக்கு மதிப்பில்லை. சோ நீங்க போகலாம்” சங்கரின் கண்முன்னேயே அந்த ரிப்போர்ட்டை கிழித்து குப்பையில் சேர்த்தேன்.

“ஹலோ, டாக்டர் .. எஸ் எஸ் நான் தான். நீங்க அந்த சங்கர ட்ரான்ஸ்பர் பண்ணற காரியத்தை சீக்கிரம் பண்ணுங்க. இன்னிக்கி என்கிட்டேயே உங்க ஹாஸ்பிடல் பத்தி ரிப்போர்ட் தரான். சொல்லவேண்டியது சொல்லிட்டேன்.”

நான் சொன்னதற்கான பிரதிபலன் கிடைத்தது. அதன் விலை புரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் “என்னங்க நான் இன்னிக்கி நம்ப சுசீலாவோட அவ நாத்தனார் வீட்டுக்கு போயிட்டு வரேன்.”

“சரி மனோ, போயிட்டு வா. எப்படியும் நானும் இன்னிக்கி வீட்டுக்கு வர லேட் ஆகும். போகும்போது நம்ப கௌரவத்துக்கு குறையில்லாம என்ன பண்ணணுமோ பண்ணிடு” என்று கூறிவிட்டு வாயிலை கடக்கும்போது

“என்னங்க…”

“என்ன?”

“ஒன்னுமில்லைங்க … என்னவோ இன்னிக்கு காலயில இருந்து ஒரு மாதிரியாவே இருக்கு போகவே தோணல.”

“இப்படி சொன்னா எப்படி. இது ரொம்ப நாளாவே சொல்லிக்கிட்டு இருந்தது தானே. போயிட்டு வா” என்று கையை அழுத்தி விடைபெறும் போதும் அவளின் பார்வை தெளிவில்லாமல் இருந்தது.

அன்று மதியமே “ஆமாம், ஓ நோ. இப்போவே நான் வரேன். வேண்டாம் வேண்டாம் … நான் வரும்முன்னயே நம்ப எப்பவும் போகற ஹாஸ்பிடல்க்கு கொண்டு போக ஏற்பாடு பண்ணு.”

“…………..”

“ஷிட்” கைபேசியை வைத்துவிட்டு மனம் நிலைக்கொள்ளாமல் வந்த போது எல்லாமே நிகழ்ந்து விட்டது. உடலில் எவ்வித உணர்வும் அசைவும் இல்லை; நினைவும் இல்லை. மூச்சு மட்டும் “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துக்கொண்டு இருந்தது.

மனைவியின் நிலையை பார்த்து பித்து பிடித்தது போல் நேராக மேலிடத்திற்கு சென்றேன் “டாக்டர், நீங்க எப்படி என்னோட மனைவிக்கு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் அந்த மருந்தை கொடுக்கலாம்? அந்த மருந்து இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை.”

“வாங்க மிஸ்டர், வாங்க. எங்களுக்கு எப்படி அது உங்க மனைவின்னு தெரியும்? எங்களை பொறுத்தவரையில் ஒரு ஸ்பெசிமென் மாதிரி. அதுக்கு பரிகாரமா தான் பணம் குடுக்கறோமே!”

“பணத்துடன் ஒரு உயிரை எப்படி சமன் ஆக்கலாம்?” என்றேன்

“ஏன் மிஸ்டர், உங்க மனைவிக்குன்னா உயிர், மத்தவங்களுக்குன்னா மயிரா?” என்று இளக்காரமாக அவர் கேட்டப்போது எனக்கு சுட்டது.

“ஸ்டாப் இட். என்ன பேசறீங்க. நான் இதை சும்மா விடப்போறதில்லை”

“ஹா ஹா ஹா . கம் ஆன். குட் ஜோக். நீங்களே எங்க ஹாஸ்பிடல் பத்தி நல்ல ரிப்போர்ட் குடுத்து இருக்கீங்க. சட்டப்படி எங்க போனாலும் நாங்க தான் ஜெயிப்போம். உங்கள மாதிரி சுயநலமானவங்க இருக்கற வரை நாங்க எங்கேயும் எப்போதும் ஜெயிப்போம். இப்பவும் நீங்க எங்களுக்கு வேண்டிய ஆளா இருக்கறதாலதான் உங்க மனைவிய வேற எடத்துக்கு கொண்டுபோக சம்மதிக்கறோம்.”

எப்படியோ அங்கிருந்து என் மனைவியை வேறொரு நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போனாலே போதும் என்ற நிலையில் வெளியேறினோம்.

“உங்க மனைவியோட ரிப்போர்ட் கிளியரா இல்லை. மொதல்ல என்ன காரணம்ன்னு தெரிஞ்சாதானே சரி பண்ண முடியும். இப்போ ஒரே ஆறுதல் உயிரோட இருக்காங்க. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஆண்டவன் துணையிருப்பார், அவரை நம்புங்க.” என்று கூறி சென்ற மருத்துவரை பார்த்தேன். காரணம் அறிந்தும் சொல்ல முடியாத நிலை.

அன்று சங்கர் கூறிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும், ஆதங்கமும், வலியும் இன்று புரிந்தது. ஜீவச்சவமாக இருக்கும் மனைவி எனக்கு போதிமரம் ஆனாள். மனைவியின் இந்த முகமே எனக்கு தண்டனை ஆனது. நான் செய்த காரியம் என் மக்களுக்கும் மனைவிக்கும் தெரிந்திருந்தால்….மனம் வலித்தது.

நானே என்னைப்பார்த்து அருவருப்பானேன். என் மனம் உள்ளிருந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது “இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இதுபோல் எவ்வளவு குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும்? மருத்துவம் பார்க்க முடியாமல் எவ்வளவு பேர் அவதிப்பட்டிருப்பர்? எத்தனையோ குடும்பங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் அழிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.” என் மனம் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கும் என்னிடம் பதிலில்லை. பல நேரம் யோசித்து முடிவு செய்தேன்.

சுயநலம் என்னை பார்த்து சிரித்தது கூறியது, “அன்னிக்கி நான் வளர்வதற்காக இயற்கையையும், மற்ற மனிதர்களையும் அழித்தாய்….இன்று எனக்கு அழிக்க நீயே கிடைத்தாய். நான் புல்லோ பூண்டோ அல்ல, விருக்ஷம்.”

“சங்கர், கொஞ்சம் வரமுடியுமா?”

“எனக்கு இப்போதான் புரியுது உங்க வார்த்தைகளுக்கான அர்த்தம். என்னையே என்னால மன்னிக்க முடியல, செய்த காரியம் அப்படி. நானும் உங்க கூட இருக்கேன். எங்கெங்கே ஓட்டைகள் இருக்குன்னு எனக்கு அத்துபடி. இனி உங்கள மாதிரி குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு நான் தப்பிக்கும் ஓட்டைகளை காட்டறேன். நீங்க அதை அடைச்சா கண்டிப்பா இதுபோல் சம்பவங்கள் குறைந்து பின்பு இல்லாமலே போய்விடும்.” என்று கூறியவாறு என் மனைவியை பார்த்தேன், அந்த வெறித்த பார்வையின் குத்தல் சற்று குறைந்ததுபோல் இருந்தது.

என் எண்ணமும் செயலும் என் வாழ்வை வழிநடத்தும் என்பது நன்கு புரிந்தது. கண்டிப்பாக இப்புதிய சிந்தனை என் மனைவியை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் நான் சுயநலமில்லா நல்ல மனிதர்களுடன் இணைந்தேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book