8

“ஐயா வாங்க, அம்மா வாங்க. அடுத்த வாரத்துல இருந்து சுவாசிக்க சுத்தமான காத்து விற்பனையில். ஒரு வாட்டி வாங்கி பாருங்க. காத்து வாங்கி அனுபவிச்சா உங்களுக்கே வித்தியாசம் தெரியும், சுவாச கோளாறு இருக்காது. இன்னும் சில வருஷத்துல அரசாங்கம் கண்டிப்பா நீங்க காசு போட்டு வாங்கின காத்துலதான் சுவாசிக்கணும்ன்னு சொல்லி காத்துக்கும் வரிபோடும். அப்போ புதுசா வாங்குறதை விட இப்போவே என்கிட்டே வாங்க ஆரம்பிச்சா குடும்பத்துக்கு சில பல சலுகைகள் கிடக்கும், எதிர்காலத்தில் உங்கள் வருமானத்தில் மிச்சமும் பிடிக்கலாம்..” என்று விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கும் மணியை பலர் ஏதோ மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனைப்போல பார்த்து சென்றனர்.

“என்ன மணி, நீ என்ன லூசா?” என்று கேட்டுகொண்டே சென்றேன் அவனை நோக்கி.

“அடடே வாடா சுகுமார். இப்போ உனக்கு என்னை பாத்தா அப்படித்தான் தெரியும். ஆனா இன்னும் சில வருஷத்துல நான் சரியான நேரத்துல சரியான தொழில் ஆரம்பிச்சது புரியும்.” என்றான்.

“ம்கும். சொல்லுவ சொல்லுவ. சொன்னாலும் ஒத்துக்கற மாதிரி ஏதாச்சும் சொல்லு.” என்றேன்.

“அப்போ நான் சொல்லற எல்லாம் கேட்டுட்டு நான் கேக்கற கேள்விக்கு மட்டும் நீ சரியா பதில் சொல்லு, நான் பேசறது லூசுத்தனமா இருக்குனு ஒத்துக்கறேன். அரசாங்கம் இனிமே ஒவ்வொருத்தரும் பயன்படுத்தும் தண்ணிக்கு வரி செலுத்தனும்ன்னு சொல்லறாங்களே, அதுக்கு ஒத்துக்கற ஜனங்க நாளைக்கு கண்டிப்பா வாங்கற காத்துலதான் மூச்சு விடணும்னு சொன்னாலும் கேக்கவேண்டி வருமே, அப்போ என்ன சொல்லுவ?” என்றான்.

“அட என்னடா இப்படி வரி போட்டா நம்பள மாதிரி ஜனங்க என்ன பண்ணும்? எதுக்கு இப்போ இப்படி ஒரு முடிவு?”

“அதை ஏன் கேக்கற எல்லாத்தையும் எப்படியாவது தனியாருக்கு தரவேண்டி தலைகீழ நிக்கறாங்க. வேற என்னத்தை சொல்ல? இதுவரைக்கும் தனியாருக்கு தந்தது எந்த லக்ஷணத்துல இருக்குன்னு யோசிச்சாங்களா? அரசாங்கம் சொல்லறது எல்லாம் கண்ணமூடிக்கிட்டு தலையாட்ட முடியுமா? நம்பளும் யோசிக்கவேண்டாமா?” என்றான்.

“சரி சரி. என்னோட காரியத்தை விடு. நீ இங்க என்ன விளம்பரப்படுத்திகிட்டு இருந்த?” என்று பேச்சை மாற்றினேன்.

“ஓ.. அதுவா. சொல்லறேன் சொல்லறேன். நீ இப்போ குடிக்கற தண்ணிக்கி என்ன பண்ணற?” என்று கேட்டவனை புரியாமல் பார்த்தேன்.

“என்னடா முழிக்கற. துட்டுக்குத்தானே வாங்கற?” என்று கேட்டான்.

“ஆமா. என்ன பண்ணறது. காசு குடுத்து வாங்கி குடிக்கற நிலைமை. இதுவரைக்கும் ஏதோ மத்த தேவைக்கு வீட்டுல இருக்கற கெணத்து தண்ணிய வெச்சி ஓட்டறோம். அதுவும் வத்திச்சுன்னா என்ன பண்ணறது.” என்றேன்.

“ம்ம் இதுக்கே இப்படி சொல்லறயே. இனிமே உன் சொந்த நிலத்துல இருக்கற தண்ணிக்கே உபயோகத்துக்கு தகுந்த மாதிரி அரசாங்கத்துக்கு வரி கட்டனும். அப்போ என்ன பண்ணுவ.” என்றவுடன் நான் புரியாமல் பார்த்தேன்.

“என்ன பாக்கற. இப்போ மத்திய அரசாங்கம் கொண்டுவந்த புதிய ‘தேசிய நீர்கொள்கை, 2012’ பத்தி தெரியுமா. அதுதான் சொல்லுது. வேணும்னா அதை பத்தி படிச்சு பாரு, அப்போ புரியும் அதோட விளைவுகள். அதுவும் தனியார்துறை காசு பாக்கற மாதிரி வழி பண்ணியிருக்காங்க.” என்றான்.

இவன் இப்படி சொன்னா ஏதாவது வில்லங்கம் இருக்குமோ? இவன அப்படியே ஒதுக்கிட முடியாது; பாம்பா பழுதான்னு தெரியாது நம்ப அரசாங்கம் மாதிரி.

“ஏன்டா.. ஒன்னோட கடைசி தங்கச்சிக்கு நல்ல காலேஜுல எடம் கிடைச்சும் இன்னும் சேக்கலையா? என்னோட தங்கச்சி பொலம்பிக்கிட்டு இருக்கா.”

“அட போடா. என்னத்தை சொல்ல? இப்போ வர வருமானத்துல குடும்பத்தை காப்பாத்தவே முடியாம முழி பிதுங்குது. உன்ன மாதிரி நாங்க என்ன பணமாவோ பொருளாவோ சேர்த்தா வைச்சிருக்கோம் ?..ஒன்னும் சேர்த்து வைக்கல. ஆனாலும் நல்லா படிக்கற புள்ளையாச்சே எப்படியாவது படிக்க வைக்கணும். சொந்த கால்ல நிக்க வைக்கணும்னு ஆசைப் பட்டா மட்டும் போதுமா?” என்றேன். இப்போதும் படிப்பிற்கு லோன் கிடைக்குமா என்று அலைந்துவிட்டு நொந்துவிட்டேன்.

“லோன்க்கு கேட்டிருந்தியே என்ன சொன்னாங்க?”

“ம்ம்ம்ம். என்ன சொல்லுவாங்க. கொஞ்சம் பேருக்கு மட்டும் தந்துட்டு இந்த வாட்டி எங்களுக்கு குடுக்க வேண்டிய அளவுக்கு நாங்க குடுத்துட்டோம். அதுனால இன்னும் கொஞ்சப்பேருக்கு தர மேல இருந்து எங்களுக்கு அப்ரூவல் வரணும்னு சொல்லறாங்க. என்னைய மாதிரி இன்னும் பல பேரு நடையா நடக்கறோம். ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொன்னு சொல்லி அனுப்பறாங்க. கிடைக்கும்கிற நம்பிக்கையே இல்ல.” என்றேன்.

“அதுசரி நீ இப்போ சொன்னமாதிரி அந்த புதுசா போட்ட தேசிய நீர்கொள்கைல என்ன போட்டிருக்காங்க?” என்று கேட்ட என்னை அன்றிரவு அவன் வீட்டிற்கு அழைத்தான்.

“அப்போ சரி ராத்திரி வரேன்” என்று விடைபெற்றேன். நான் விடை பெறவும் அவன் “ஐயா வாங்க, அம்மா வாங்க.” என்று தொடங்கினான்.

“அட நீ வந்துட்டியே. வரமாட்டியோன்னு நினைச்சேன். இரு இப்போ வரேன்” என்று என்னை இருக்கையில் இருக்கவைத்துவிட்டு உள்ளே சென்றான்.

“அண்ணே. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே குடிக்க காப்பி கொண்டுவந்து தந்தாள் என் கடைசி தங்கை மல்லியின் தோழி மாலா.

“நல்லா இருக்கேன் ம்மா. எப்படி பொழுது போகுது? அடுத்த மாசத்துல இருந்து காலேஜுக்கு போகணும்ல” என்றேன்.

“அண்ணே..அது வந்து.. அது முடியுமான்னு தெரியல. மல்லி சேரலைன்னா என்னை அனுப்புவாங்களான்னு தெரியல. அவளும் என்கூட இருப்பான்னு தெரிஞ்சதாலதான் வேற ஊருல ஹாஸ்டலில் தங்கி படிக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னிக்கி அண்ணன் கிட்ட மதியம் பேசினத சொன்னாங்க. அண்ணே எப்படியாச்சும் சேத்துடுங்க அண்ணே. நம்ப ஜனத்துல பொம்பளை புள்ளைங்க படிச்சது கம்மி, நாங்களாச்சும் நல்லா படிக்கணும்னு சின்ன வயசுல இருந்து கஷ்ட்டப்பட்டு படிச்சோம்.” என்று கலங்கிய மாலாவின் வேதனை எனக்கு புரிந்தது.

“என்னம்மா பண்ணறது. கையில காசு இருந்தா பிரச்சினை இல்லையே. சரி அரசாங்கம்தான் லோன் தராங்களே எப்படியாவது படிக்க வைச்சிடலாம்ன்னு நினைச்சேன். இதுவரைக்கும் சாதகமா ஒரு பதிலும் வரல.. ம்ம்ம். என்ன செய்ய? பாப்போம். தொழிலும் முன்ன போல இல்லை, வெளிய அதிக வட்டிக்கும் வாங்க முடியாது. அடுத்த வாரம் வரைக்கும் அவகாசம் இருக்கே, அதுக்குள்ள ஏதாவது சரியாகாதா அப்படின்னு பாக்கறேன்.” என்று கூறினேன்.

“இப்போ பாரு அரசாங்கம் தனியாருக்கு கல்விய தாரவாத்து தந்தாச்சு; அதோட விளைவா நீயும் உன்னை மாதிரி ஆளுங்களும் இப்போ லோனுக்கு லோலோன்னு அலையவேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டாங்க. அதுமட்டுமில்லாம, படிக்கற புள்ளைகளும் படிக்க முடியாம அல்லோலப்படுது. கல்வி மட்டுமில்லை மருத்துவமும் தனியாருக்கு தள்ளிட்டாங்க. நம்பள மாதிரி சாமான்ய ஜனங்க நோய்வாய்ப்பட்டா எங்க போக? என்று கேட்டான்.

“எங்க போக, அரசாங்கம் கட்டிபோட்ட ஆஸ்பத்திரிக்கு தான். ஆனா என்ன செய்ய அங்கயும் ஊழல். வைத்தியம் பாக்க திண்டாடனும்.” என்றேன்.

“அதைத் தான் நானும் சொல்லறேன். இப்போ கொண்டுவந்து இருக்கற மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிலா, அரசே அரசாங்க மருத்துவமனைய நல்ல விதமா கொண்டுவந்தா தனியார தேடிப் போற ஜனங்க குறைந்துடும். ஆனா நம்ப அரசியல்வாதிகள் விட மாட்டானுங்க. எவ்வளவு அரசியல்வாதிகள் காலேஜும், ஆஸ்பத்திரியும் வெச்சிக்கிட்டு கல்லா கட்டறாங்க.”

“ஆமாம், நானும் இதை யோசிக்கலயே” என்றேன்.

“தனியாருக்கு தாரவாத்து தந்துட்டு அப்புறம் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க, அவங்க வீட்டு பொறுப்ப யாருக்காச்சும் தருவாங்களா? நாட்டை ஆளவேண்டியது அவங்க பொறுப்பு, அப்படி இருக்கும்போது அதை ஏலம் போடறது சரியா? அப்படி பொறுப்பு எடுக்க முடியலைனா எதுக்கு தலைமை ஏத்துக்கிட்டு மத்தவங்களுக்கு, அதுவும் நம்பி உக்கார வெச்ச நாட்டுமக்களுக்கு கெடுதலும் வேண்டிய தனியார் கம்பெனிகளுக்கும், சொந்தமான கம்பெனிகளுக்கும் லாபமும் வரமாதிரி செய்யணும். தாரைவார்த்து குடுத்தா கஷ்டப்பட போறது மக்கள்தானே நமக்கு என்ன அப்படிங்கற எண்ணம் இருக்குது. இப்போ குடிக்கற தண்ணிக்கு காசுபோட்டு வாங்கறோம், அதுவும் மனுஷன் குடிக்க அருகதை இல்லாத தண்ணிக்கு. இந்தத் தண்ணிய குடிச்சிட்டு ஒடம்புக்கு சுகமில்லாம போய் ஆஸ்பத்திரிக்கு மொய் அழறோம். தனியார் விக்கற தண்ணியாவது தரமானதா இருக்கா? அதுவும் இல்லை. அப்போ அரசு என்ன செஞ்சி இருக்கணும்? அவங்களுக்கு தனியார் மயமாக தண்ணீர் சுத்திகரித்து விக்க தந்த தொழில் உரிமையை ரத்துசெய்திருந்தா அது நியாயம். சரிதானே?” என்று என்னை கேட்டான்

“ஆமா. நீ சொல்லறதும் சரிதான் ”

“நிர்வாகம்ங்கற பெயருல மக்களுக்கு நல்லது செய்யறாங்களான்னு தெரியல. ஒரு நாட்டுல மக்கள் நல்லா வாழ, சுயசார்பா இருந்தாலே போதும். ஆனா இப்போ நாம மத்தவங்களை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு ஏற்படுத்துது அரசாங்கம். ஜெயமோகன் எழுதின ‘உயிர்வேலி’ பத்தி படிச்சிப்பாத்தா தெரியும்.. இப்போ இவங்க எடுக்கற முடிவுகள் பின்னாளில் எப்படி நம்மை வாட்டபோகுதுன்னு.” என்றான்

எனக்கு பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

“எத்தனை தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தரமானதா இருக்கு? அறிவை வளர்க்காம இருந்தா தானே இவனுங்க ராஜ்யம் நடக்கும். மக்களை டாஸ்மாக் தயவால குடிகாரனாவும் இலவசத்தால சோம்பேறியாவும் திரியட்டும் அப்படின்னு நினைக்குறாங்க…. இவனுங்களுக்கு என்ன வந்தது? அப்படியே ஒழைச்சி வாழற மக்களும் நிம்மதியா வாழத்தான் முடியுதா? தொட்டதுக்கு எல்லாத்துக்கும் காசு. படிக்க வெக்க முடியாது. அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் தன்னோட கட்டுப்பாட்டுல வெச்சிக்கிட்டு மத்ததை தனியாருக்கு தரட்டுமே. யாரு வேணாம்னு சொன்னாங்க? ஆனா அப்படி செஞ்சா எப்படி கல்லா கட்ட முடியும்?” என்று மணி சொல்வதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியுமா?

“அதுதான் இன்னிக்கி தண்ணிய சொந்தம் கொண்டாட முடியாம செய்யறவனுங்க நாளைக்கு அதையே காத்துக்கும் செய்ய மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். அதுக்கு தான் நான், நாளைக்கு காத்தை விக்க இப்போவே தயாராகுறேன்” என்றான்.

“நிஜமாத்தான் சொல்லறயா தண்ணிய சொந்தம் கொண்டாட முடியாதுன்னு.” என்று கேட்ட என்னை பார்த்து

“ஆமா. பல ஆண்டுகளுக்கு முன்ன இருந்த ஆறுகள் பலதும் இப்போ இல்லை. இருக்கறதுல தூர் வாரற அழகு தான் நமக்கு தெரியுமே. இருக்கற நீராதாரத்தை காப்பாத்தி மேம்படுத்த யோசிக்காம பங்கீட்டுக்கு போய்ட்டாங்க. ஆனாலும் மாநிலங்களுக்கு நடுவுல எப்படி நதிநீர் பிரச்சினை தீர்க்கறது என்பது பத்தி தெளிவா ஒண்ணுமே சொல்லல. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.” என்றான்.

“ஓஹோ.” இதை பற்றி எவ்வளவு மக்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்.

“அதுக்குன்னு நீ இப்போ சொல்லிக்கிட்டு திரியுற காத்து வாங்கலையோ ..காத்து எப்படி சரிவரும்? இது மக்களை ஏமாத்தறது மாதிரி தானே” என்றேன்.

“இயற்கையா கிடைக்கற தண்ணிக்கு, அதுவும் சொந்த நிலத்துல கிடைக்கற தண்ணிக்கே வரிபோட தீர்மானிக்கறவங்க நாளைக்கு காத்துக்கும் வரிபோடமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இப்போ நான் இப்படி சொல்லிக்கிட்டு திரியறத பாத்துட்டு யோசிக்கறவன் முழிச்சுக்குவான். யோசிக்காம போனா விரிக்கற வலையில..அதுதான் வியாபாரம்கற வலையில சிக்கிக்குவான். சில்லற வணிகத்தை தாரவாத்து தர சொன்னாங்களே அவன் வந்தா வேலை வாய்ப்பு அதிகரிக்கும்ன்னு, இவங்க அறுவது வருஷத்துல புடுங்காததையா அவன் நிமிஷத்துல புடுங்க போறான். இதெல்லாம் மக்களை உயிரோட பொதைக்கறதுக்கு சமம். மேலே இருக்கறதை எல்லாம் கூறு போட்டு வித்தாச்சு, அதுதான் நிலத்தடியில் இருக்கற சுரங்கத்தையும் சுரண்டிட்டான், தண்ணிய மட்டும் விட்டுவைப்பானா?” என்று அவன் கூறும்போது அவனின் சொல்லிலும் செயலிலும் ஆதங்கம் இருப்பதை உணர்ந்தேன். அவன் காற்றை விற்பனை பொருளாக்கியது கேலி அல்ல..அவனின் ஆதங்கம்.

“அப்போ தண்ணிக்கு இப்போ இருக்கறதைவிட கூடுதலா தவிக்கவேண்டி வருமே. அதுக்கு என்ன பண்ணுவாங்களாம்” என்றேன்.

“ரெண்டு கக்கூஸ சரியாக்க 35 லக்ஷம் செலவு பண்ணுறவங்க, கொடௌன்ல வீணா போற தானியங்களை பசி பட்டினியால வாடுற மக்களுக்கு கொடுக்காதிருக்க சால்ஜாப்பு சொன்னவங்க, தாகத்துல தவிக்கிற நிலைமையில மக்கள் இருந்தா குடிக்க தண்ணியா தரபோவுது? சும்மா மூடிகிட்டு போவியா.” என்ற மணியின் கேள்விக்கு பதில் யாரிடம்?

ஆம், யோசிக்கவேண்டியிருக்கிறது. யோசித்துக்கொண்டே நடந்தேன் நான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book