12

‘எலே அந்தப் பக்கமா எங்க போறே?” என்று கேட்ட கந்தனைப் பார்த்து,

“வீட்டு சாமான் விக்கற கடை போடப் போறேன்” என்றேன்

“கேணப்பய… சுடுகாட்டுலப் போய் கடையத் தொறக்கற மூஞ்சியப் பாரு. மறைகிறைக் கழண்டுச்சாலே?”

“ம்க்கும்.. சொன்னாலும் புரிஞ்சிக்கிட்டு மேற்கொண்டு ஆற காரியத்தைப் பாக்கறமாதிரி ….”

“புரியறமாதிரி சொல்லுவே” என்று என்னை அவனருகில் இருத்திக்கொண்டான்; அந்த ஆலமர நிழலில் எங்கள் விவாதம் தொடர்ந்தது.

“இன்னும் கொஞ்ச நாள், இல்லைனா வருஷத்துல, நம்ப நாட்டுப் பொருட்களை போய் மக்கள் எங்க வாங்குவாங்க? அதுதாம்ப்பா.. இப்போவே சுடுகாட்டுல ஒரு கடையப் போட்டுடலாம் அப்படின்னு..” என்று இழுத்த என்னைப் பார்த்து

“என்ன ஒரு மார்க்கமாவே பேசுற..சுடுகாட்டுல கடை…மக்கள் சாமான் வாங்கரதப் பத்திக் கவலை புரியலியேப்பா” என்றக் கந்தனை மேலும் குழப்பாமல்,

“அது ஒண்ணுமில்லை! வெளிநாட்டுக் காரனுக்குச் சில்லறை வியாபாரத்தை அனுமதிக்கும் போது கவர்மென்ட் என்ன சொன்னாங்க? ஞாபகம் இருக்கா?” என்றேன்.

“என்ன இப்படி கேட்டுப்புட்ட? அவங்க வாறதாலதான் இங்க அம்புட்டு பேருக்கும் வேலை கிடைக்கும், ஏற்கனவே இங்க நம்பள மாதிரி வியாபாரம், விவசாயம் பண்ணறவங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. வெளிநாட்டுக்காரன் கடை எல்லாம் பட்டணத்துலதான்… அதுவும் பத்து லட்சம் பேருக்கு மேல வசிக்கும் இடத்துல தான் கடைய போட முடியும் அப்படின்னு தானேப்பா சொன்னாங்க.”

“ஆமாம்..சொன்னாங்கதான்..”

“அதுக்கு இப்போ என்ன வந்தது?” என்றான் கந்தன்

“நீ சொன்னதுக்கு எல்லாமே ஆப்பு வந்தது…அதுமட்டுமில்லப்பா.. இன்னும்கூட இருக்கு”

“என்னது இன்னும் இருக்கா?”

“ஆமாம்ப்பா அனுமதி வாங்கற வரைக்கும் நல்ல பாம்பா தலையத் தலைய ஆட்டிப்புட்டு இப்போ நேரம்பாத்து சீறுற மாதிரி ஆகிடிச்சு.”

“நீ என்ன சொல்லற? அதுதான் நம்ப அப்பச்சி மத்தியில குந்திக்கினு இருக்காரே, அவரும் நமக்கு விடுதலை வாங்கித் தந்தக் கதரும் சீறுற பாம்ப, அடக்கிட மாட்டாங்களா?” என்ற கந்தனை என்ன சொல்ல!

அவனை மேலும் கீழும் பார்த்த நான் “நீ ஏன் இன்னும் கோமணத்தோடத் திரியுற அப்படின்னு இப்போ தானே புரியுது.”

“இதப்பாரு..என்னைச் சொல்லு கேட்டுக்கறேன், ஆனா என்னோட கோவணத்தை ஒன்னும் சொல்லாத. ஆமாம் சொல்லிப்புட்டேன்”

“நான் கோவணத்தைச் சொன்னதுக்கே இம்புட்டுக் கோவம் வருதே. உன்னோட கோவணத்தையே உருவிக்கிட்டா என்ன செய்யுவே?” என்றேன் ஆதங்கத்தில்.

“இப்படிச் சொன்னா எப்படி. புரியற மாதிரி சொல்லு”

அப்போது “இங்க என்ன ரெண்டு பேரும் கதை பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று வந்தான் மாரி.

“ம்ம்.. அறிவு கண்ணத் தொறந்து கோவணக்கதையைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கோம்” என்றான் கந்தன்.

“என்னலே.. இந்தக் குசும்புதானே வேணாங்கறது. நீ சொல்லுப்பா” என்றான் என்னைப் பார்த்து..

“கந்தன் அண்ணே சொல்லறது சரிதான்.. இப்பத்தி நாட்டு நிலவரத்தப் பத்தி, அவங்க ஊரையே சுருட்ட எடுக்கற முயற்சிப் பத்தி..கோவணத்தக்கூட விடமாட்டாங்கன்னுப் பேசிக்கிட்டு இருக்கோம்.”

“அப்போச் சொல்லு… எந்த விஷயத்தப் பத்தி” என்றான் மாரி.

“வெளிநாட்டுக்காரன் இங்க வந்து வியாபாரம் செய்யப்போறதை பத்தி” என்று எடுத்துத் தந்தான் கந்தன்.

“ம்ம்ம் வெளிநாட்டுக்காரனுக்குத் தாரை வாக்கும்போது, நம்ப விளைவிக்கறதும், உற்பத்தி செய்யுற பொருள்களை முப்பது சதமாவது அவனுங்க வாங்கி வித்துக்குறதுனும், சொந்த கட்டிடம், குடவுனுகள் போல் இருக்கும் அசையா சொத்தா அவனுங்க பாதிப் பணத்தை போடவும் ஒத்துகிட்டாங்க.”

“அதுதான் தெரியுமே. இப்போ என்ன புதுசா?”

“சொன்னதை எல்லாம் மாத்த ஏற்பாடு நடக்குது. முன்னாடி சொன்ன நம்ப ஊரு உற்பத்தியில் விளையுற பொருட்களை, வாங்கிவிக்க ஒத்துக்கிட்ட அளவை விட இன்னும் கொறச்சிட்டு (20 சதவீதமாவும்), 10 லட்சம் பேருக்கு கம்மியா இருக்கற எடத்துலக் கடையத் திறக்கச் சம்மதிக்கணும்னு மாத்தறாங்களாம்”

“அடப் பாவிங்களா?”

“அதுவும் இல்லாம.. பாதிப் பணத்தை அசையாச் சொத்துலப் போட நான் என்ன கேணையா? அப்படின்னு அவன் கேக்க..அவனோட மனசுக் குளிர நம்ப மனசு வெந்தாலும் பரவாயில்லை அப்படினுட்டு, சலுகைன்னு சொல்லிட்டு இம்புட்டுக் காரியத்தையும் வெளிநாட்டுக்காரனுக்குச் சாதகமா மாத்த, மத்தியில இருக்கற அரசாங்கம் முனைப்புக் காட்டுது” என்றேன்.

“இம்புட்டு நடக்குதா?”

“ஆமாம். அனுமதித் தந்தக் கொஞ்ச நாளுலியே நம்ப சொந்தமா விளைவிச்சி உண்டாக்குற பொருள்கள வாங்க ஜகா வாங்குறவன், நாளைக்கு நூறு சதம் அவன் இஷ்டப்படி வெளிநாட்டு உற்பத்திப் பொருளை விக்க மாட்டான் அப்படின்னு என்ன நிச்சயம்? அப்போ அவங்க எல்லா எடத்துலயும் கடைய தொறந்து கல்லா கட்டினா என்னைய மாதிரி ஆளுங்க சுடுகாட்டுக்குதான் போய்த்தானே கடைய விரிக்கணும்..அப்பத்தானே நம்ம ஆளுங்களும் பொழைக்கலாம் ” என்றேன்

“அண்ணே… அவனுங்க வந்தா விலை கம்மியாவும் தரமான சாமான்கள் கிடைக்கும்ன்னும் சொல்லுதாங்களே.” என்றான் மாரி.

“சோமாறி பயலுக சொல்லறதை நம்பாத. இப்போவே அவங்க ஆட்டத்துக்கு நம்ப ஆடணும்ன்னு சொல்லுறவன் நாளைக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. இப்போ சல்லிசா வித்துப்போட்டு, ஜனங்க அவன் பின்னாடி போனதும் அவன் வெச்சதுதான் விலை அப்படின்னு சொல்லுவான்.” என்றேன்.

இதுவரை நடப்பதைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்த காய்கறிகளைக் கூறுகட்டி விற்கும் பொன்னம்மா, தன் வாயைத் திறந்தாள்!

“இப்போ சொன்னியே, அது என்னமோ உண்மை. நான் இங்கக் கூறு கட்டி விக்கற காயைப் பேரம் பேசிகிட்டு வாங்காம போறவங்க, அந்தக் கோடில இருக்கற நம்ப நாட்டுக்காரன் கடை… பேரு என்ன …அதுதாம்ப்பா செல்போன கூறு கட்டி விக்கறமாதிரி வித்தானே..அவன்தான்”

“ஓ .. ரிலையன்ஸா” என்று எடுத்துத் தந்தான் மாரி

“ஆமாம்… அவனேதான்..அங்கப் போய் போட்ட விலைக்கு வாங்கிக்கிட்டுப் போறாங்க. என்னமோப்பா கூறுகட்டி விக்கற எங்க பொருள் என்னமோ கேவலமானது மாதிரியும் … வத்தலும் சொத்தலும் பாக்கெட்டுல அடைச்சித் தந்தா தரமானது அப்படிங்கற நினைப்பு நம்ப ஜனங்களுக்கு வந்திடுச்சு! நாம அன்னன்னிக்கு விளையற காய குடுத்தாலும், ப்ரெஸ்ஸா இருக்குன்னு ரெண்டு நாளு குளுருல இருக்குற காயத்தானே எல்லாரும் வாங்கறாங்க ம்ஹ்ம்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தாள்

“நம்ப நாட்டுக்காரனே கையில் காசும், ஆள் பலமும் இருக்கற தகிரியத்துல சூப்பர் மார்க்கெட், அப்புறம் வேறேதோ பேரு… என்ன எழவோ ஒரே எடத்துல எல்லா பொருளும் கிடைக்கும் அப்படின்னு கூப்பாடுப் போட்டு திறந்துடறான். நம்ப ஜனங்களும் அங்கன போய் விட்டில் பூச்சி மாதிரி விழுவாங்க. இவனுங்களாலேயே சின்னச் சின்னக் கடைங்க வியாபாரம் படுத்துடுச்சு.” என்று மேலும் தன் பட்டறிவைப் பகிர்ந்தாள்.

“இப்போப் படுத்த சின்ன வியாபாரிகள ஒரேடியாக் குழியிலப் படுக்க வைக்கத்தான் வெளிநாட்டுக்காரன இஸ்த்து விட்டிருக்காங்க” என்றேன்.

“அடப் பாவி மக்கா. இவனுங்க என்னைய மாதிரி விவசாயிகளுக்கு நல்லது பண்ணறோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு திரியுறத நம்பி, இருக்கற கஷ்டத்திலயும் உற்பத்தி செஞ்சு புழைக்கற எங்களோட ஒட்டுக் கோவணத்தையும் உருவர நாதாரிப்பயகள என்ன செய்ய?”

“விவசாயிங்க மட்டுமில்லை, எங்களை மாதிரி வியாபாரிங்க, பொது ஜனங்க எல்லாரோட தலையையும் மொட்டைப் போட்டுச் சந்தனம் பூசி, காதுல பூ சுத்தி முச்சந்தியில குந்தவெச்சி அழகு பாக்க நாம விட்டுட்டோம். இனியும் சுதாரிச்சுக்கிட்டு முழிக்காட்டி, அரசியல்வாந்தி..தப்புத் தப்பு …அரசியல்வாதிகள் தயாரிக்கற முள் கிரீடத்தையும் நம்பத் தலையில அலங்கரிச்சுடுவாங்க.” என்றேன்

“அந்த முள் கிரீடத்தை நம்ப தலைல அலங்கரிக்க சம்மதிச்சி தலைய காட்ட நாம் என்ன கேணப்பயகளா? சுடுகாட்டுல போட்டாலும் எங்க போட்டாலும் நம்ப சனங்க உற்பத்தி பொருள வாங்குவோம்ன்னு நாம் தீர்மானிச்சு நம்ப கோவணத்தை நாமே காப்பாத்திக்க வேண்டியதுதான்.” என்றான் மாரி.

“அப்படி போடு அருவாள” என்ற கந்தன் மற்றும் மாரியின் வார்த்தைகள் நம் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விதை விதைத்தது!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book