3

விஜயன் தன் வீட்டிற்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான். வீட்டில் யாருமில்லை.

“விஜயன், உங்க மனைவிகூட என் பையனும் மனைவியும் போயிருக்காங்க. இப்போ கவலைப்பட ஒண்ணுமில்லை. நீங்க வரவரைக்கும் காத்துகிட்டு இருக்க முடியாதே, அதனாலதான் நான் அவங்கள அனுப்பிட்டு உங்களை என்கூடவே கூட்டிகிட்டு போகலாம்னு வெயிட் பண்ணறேன். உங்க செல்போன் என்ன ஆச்சு? ரிங் போய்கிட்டே இருந்தது.” என்று அடுத்த வீட்டு சங்கரன் கூறியபோதுதான் என் செல்போன் அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வந்தது.

நெஞ்சம் படப்படப்பாக அடித்துக்கொண்டது, அதுவரை எதுவும் உணராதது அப்போதுதான் நான் உணர்ந்தேன். அதுவரை பிடித்துக்கொண்டு இருந்த என் மூச்சு வெளிவருவதும், என் கால்கள் வலுவிழந்து துவளக்கண்டு அப்படியே வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டேன்.

அதற்குள் அடுத்த வீட்டில் வசிப்பவர்கள் சிலர் என்னை சூழ்ந்துக்கொண்டு பேசுவது தெரிந்தது, ஆனால் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று என் நினைவில் பதியவில்லை. மனம் என் மகளையே மானசீகமாக சுற்றிசுற்றி வந்தது. தவறு செய்துவிட்டோமோ என்று என் மனம் பதைத்தது.

“கொஞ்சம் நகருங்க” என்று அவர்களை அப்புறப்படுத்திவிட்டு குடிக்க தண்ணீர் தந்து என்னை ஆசுவாசப்படுத்திய சங்கரன் உடனே தன் வண்டியில் ஏற்றி மருத்துவமனை நோக்கி செல்லவும் என் மனமோ பின்னோக்கி சென்றது.

“அப்பா, ப்ளீஸ்… நானும் உங்ககூடவே வரேன். என்னையும் கூட்டிகிட்டு போங்க.” என்று கூறிய மகளை பார்த்து “ஸ்வேதா குட்டி நீ என்ன இன்னும் சின்ன பாப்பாவா? அடுத்த மாசம் டெர்ம் எக்ஸாம் வருதே, இப்போ ஸ்கூல் லீவ் போட்டுட்டு போனா சரியா வருமா? நானும் அம்மாவும் பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு தானே போறோம். நாங்க போயிட்டு என்னன்னு பாத்துட்டு சீக்கிரமே வந்துடுவோம். அப்படி யாராவது அங்க இருக்கணும்னு இருந்தா அம்மாவை விட்டுட்டு நான் வந்துடுவேன். எப்படியும் அடுத்த மாசம் வரும் லீவ்ல நாம்ப பாட்டிய பாக்க போகத்தானே போறோம். புரிஞ்சிக்கோடா, இப்போ பத்தாவது படிக்கற, இல்லைனாலும் உன்ன கூட்டிகிட்டு போவேன்”

“அப்போ நான் என்கூட படிக்கற வித்யா வீட்டுல போய் தங்கறேன், அவங்க வீட்டுல ஒண்ணுமே சொல்லமாட்டாங்க.” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

அதுஎன்னவோ அவளுக்கு அவர்களைப் பார்த்தாலே ஆகாது, ஆனால் அவர்கள் ஆசையாகத்தான் இருப்பார்கள். ஏன் என்ற காரணம் தெளிவாக கூறாவிட்டாலும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று விடமுடியுமா? தூரத்து சொந்தமாக இருந்தாலும்கூட, நம் சொந்தம்ன்னு சொல்லிக்க அவங்கதான் பக்கத்துல இருக்காங்க. இவதான் அவங்க வீட்டுக்கு போகவே மாட்டா, அதுனாலதான் அவங்கள இங்க வந்து தங்க சொல்லறோம். இன்னும் சின்ன குழந்தையா நிலைமையை புரிஞ்சிக்காம இருக்காளே. ரொம்ப செல்லம் குடுத்துட்டோமோ? என்று தோன்றியதை மாற்றிவைத்து, “அது எப்படி மத்தவங்க வீட்டுல விடமுடியும், அதுவும் வயசு பொண்ண. சொன்னா புரிஞ்சிக்கணும் குட்டி. உனக்குதான் துணைக்கு நம்ப அத்தைப்பாட்டியும் தாத்தாவும் வந்துடற போறாங்க. தாத்தா வேலைக்கு போயிட்டு எப்படியும் இங்க வந்துடுவாரு, அப்பப்போ வந்து அவங்க பையனும் வந்துட்டு போவாங்க. பாரு அவங்க பையன கூட விட்டுட்டு உனக்காகவே இங்க வந்து தங்க போறாங்க. அப்புறம் என்னடா..” என்று சமாதானம் பலதும் கூறி அவளின் விருப்பத்தையும் மீறி விட்டுச்சென்றது தப்போ என்று இன்று தோன்றினாலும் என்ன பயன்?

ஊருக்கு சென்று வந்ததில் இருந்தே அவளிடம் மாற்றம் இருந்ததோ? நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ? என்ற சிந்தனை தடைப்பட்டது, மருத்துவமனையில் வண்டி நின்றதால்.

உள்ளே ஓடிய என்னை ICU அறையின் வாசலில் அழுது சிவந்து இருந்த என் மனைவியின் முகமே வரவேற்றது. அவளுக்கு என்னைப் பார்த்ததும் வார்த்தையே வரவில்லை. அதே நேரம் அந்த அறையில் இருந்து வெளிப்பட்ட மருத்துவர் உள்ளே சென்று மகளை பார்க்கவிடாமல் “வாங்க முதல்ல உங்ககூட கொஞ்சம் பேசணும்” என்று அழைத்ததும் ஏதோவொரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல் பின் சென்றோம்.

“இதுக்கு முன்னால உங்க பொண்ணு இப்படி ஏதாவது செஞ்சியிருக்காங்களா?”

“இல்லை டாக்டர்”

“வேற ஏதாவது அவங்ககிட்ட மாற்றம் தெரிஞ்சிதா? உங்களுக்கு தெரிஞ்சது எல்லாமே சொல்லுங்க, அவங்க ஸ்கூல்பத்தியும்” என்றார்.

நான் என் மனைவியை பார்த்தேன், அவளால் பேசமுடியாது என்று அறிந்தேன். எதில் இருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் இருக்க முடியாதே!

“இப்போ கொஞ்சநாளா சரியா சாப்பிடவே மாட்டா, நல்லா படிக்கற பொண்ணுதான் ஆனா இப்போ அவ்வளவா படிக்கறதில்லை. அதுக்காக நாங்க அவளை ஒண்ணுமே சொல்லறதில்லை எப்படியும் அவளே தானா படிக்க ஆரம்பிச்சிட்டா போதும்னு விட்டுட்டோம். ஸ்கூல்ல போன வாரம் அவங்க டீச்சர் வர சொல்லி நான் போய் பார்த்தேன். இப்போ கொஞ்ச நாளா அவ பாடத்தை கவனிக்கறது இல்லைன்னும், அப்பபோ ஏதோ வேறலோகத்துல இருக்கறமாதிரி எங்கேயோ யோசனையாவே இருக்கா அப்படின்னும், அவ்வளவா யாருகூடயும் முன்னபோல கலகலப்பா இல்லை அப்படின்னு சொன்னாங்க. நாங்களும் அவளுக்கு என்ன பிரச்சினை அப்படின்னு கேட்டு பாத்துட்டோம்.” அதுவரைக்கும் சொல்லிக்கொண்டு வந்த என்னால் மேலே சொல்ல முடியவில்லை.

நான் தயங்குவதை பார்த்து என் மனைவி ஆரம்பித்தாள், “அது வந்து டாக்டர்… அவளுக்கு அவளோட அத்தைப்பாட்டி வீட்டு ஆளுங்களை அவ்வளவா பிடிக்காது. எங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு கொஞ்ச நாளைக்கு முன்னே நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போகவேண்டியிருந்தது, அதுனால அத்தைப்பாட்டியும் தாத்தாவும் எங்க வீட்டுல வந்து தங்கினாங்க. அவங்க பையனும் வேலைக்கு போறதால அப்பப்போ வந்து பாத்துட்டு போனான். வந்த அன்னிக்கி எங்கள பாத்துட்டு ஒரே அழுகை, சரி பாக்காத இருந்ததால அப்படின்னு நினைச்சோம். ஆனாலும்கூட கொஞ்ச நாளாவே சரி சாப்பாடும் தூக்கமும் இல்லை. என்னமோங்க எப்படி சொல்லறதுன்னு தெரியல ஒரு மூட் அவுட்டாவே இருந்தா. என்ன கேட்டாலும் பதிலே வராது. எப்படியோ தோண்டித்துருவி கேட்டதுல அந்த தாத்தா சரியில்லை அப்படீன்னு சொல்லறா. அவங்க வயசுல பெரியவங்க, ரொம்ப தங்கமானவங்க, பொண்ணு சொல்லறமாதிரி இருக்காது, இத்தனைக்கும் வெளிப்படையாவே கேட்டுட்டேன் அவளை எங்கயாவது தொட்டுட்டாரா அப்படீன்னு, அதுக்கு இல்லை ஆனா அப்படின்னு ஒண்ணுமே சொல்லாம அழுகை. அவங்க எங்க சொந்தகாரங்க தான், ரொம்ப நல்ல குடும்பம், அவரும் ரொம்ப வயசானவர் இல்லை ஒரு 54 – 55 வயசுதான் இருக்கும். ஒரு பெரிய கம்பெனில நல்ல போஸ்ட்ல இருக்காரு. அவரு இதுவரைக்கும் ஒரு தப்பான பார்வையே பார்த்ததில்லை. அவரு பேரை எடுத்தாலே ஒன்னு அழுவா இல்லேன்னா கத்தறா. அடுத்த மாசம் எங்க மாமியாருக்கு ஆபரேஷன், அப்போ எக்ஸாம்கறதுனால அவங்ககிட்ட விட்டுட்டு போகலாம்ன்னு சொன்னதுல இருந்து ஒரே ரகளை. ஆனா இப்படி பண்ணுவான்னு நினைக்கல” என்று தன் மனதில் இருந்ததை சொன்னவுடன் ஏதோவொரு பாரம் இறங்கியதுபோல் இருந்தது.

“உங்க பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் தரும்போது அவங்க மனசுல இருந்து வந்த புலம்பல்கள பாக்கும்போது அவங்க சொன்னது உண்மைதான் அப்படின்னு புரிஞ்சிக்க முடியுது. அது மட்டுமில்லாமல் அவங்க கொஞ்சம் முன்னையே மயக்கம் தெளிஞ்சிட்டாங்க; எங்க டீம்ல இருக்கற டாக்டர் பேச்சுக்குடுத்து பேச வெச்சதுல விஷயங்களை அவங்க சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுனாலதான் நான் உங்களை இங்க கூப்பிட்டுகிட்டு வந்தேன். முதல்ல நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும், வெறும தவறான இடத்துல தொட்டாதான் sexual abuse அப்படீன்னு நினைக்காதீங்க. தொடாமலேயே எதிர்ல பாக்கறமாதிரி ஒருத்தர் தன்னோட பிறப்புறுப்பை காட்டினாலோ, உணர்ச்சிகளை தூண்டிவிட போர்னோகிராபி (pornography materials) காண்பித்தாலோ, இல்லைனா வலுக்கட்டாயமாக யாரவது உடலுறவை வைத்துக்கொள்வதை பார்க்கவைத்தாலோ இல்லைனா சுய இன்பத்தை (masturbation) காணவைத்தலும் அல்லது வெறும் வாய் வார்த்தையால் சொல்வதும் அது பாலியல் அத்துமீறல்தான்.”

அதைக் கேட்டு எங்களுக்கு ஒன்றுமே சொல்ல தோன்றவில்லை.

மருத்துவரே தொடர்ந்தார் “இந்த நிலைமைல நீங்க அவங்க சொல்லறதை நம்பாததும், புரிஞ்சிகாததும் இங்க முக்கியமான மூல காரணம். இந்த நிலைல மீண்டும் அவங்ககிட்ட விட்டுட்டு போகபோறீங்க அப்படின்னா யோசிச்சி பாருங்க. இந்த விஷயத்தை யாருகிட்டையும் வெளிப்படுத்தாம மனசுலையே போட்டுபோட்டு அழுத்தியிருக்காங்க.” என்று எங்களைப் பார்த்தார்.

எங்களுக்கு புரிந்தது, ஆனால் வாய் பேச முடியவில்லை, மனம் சொன்ன விஷயத்தை ஜீரணிப்பேனா என்றது. அது எப்படி நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல நிலையில் எல்லோருக்கும் நல்லவராக இருப்பவரால்…… இதைதான் தன் மகள் அவளுக்கு தெரிந்த விதத்தில் சொன்னதும், தாங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததும்…. என்ன ஒரு மடத்தனம்.

எங்களின் பாவனைகளை வைத்தே மருத்துவர் புரிந்துக்கொண்டார் “நல்ல குடும்பம் அல்லது பரம்பரை, சமூகத்தில் இருக்கும் நிலை இது எல்லாம் தனிமனித வக்கிரத்தை தடுக்காது. வக்கிரபுத்தி உள்ளவன் எங்கு வேண்டுமானாலும் எந்த நிலையிலும் யாராகவும் இருக்கக்கூடும். குழந்தைகள் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதுனால எப்படி நம் பிள்ளைகளுக்கு குட் டச், பாட் டச் (Good Touch / Bad touch) சொல்லித்தருகிறோமோ இவ்வாறும் சிலரை எதிர்க்கொள்ளும் நிலை வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்று எடுத்துக்கூறி அவர்கள் சொல்வதை முதலில் நம்ப வேண்டும்.”

ஆமாம் அவள் கூறியபோது நாமே நம்பவில்லை… இதுபோல் எத்தனை குடும்பங்களில் நடக்கிறதோ?

எங்களையே பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் மேலும் தொடர்ந்தார், “எப்படியும் பிள்ளைகள் ஏதோவொரு விதத்தில் சொல்ல வருவார்கள், அதை புரிந்துகொள்ளவும், மாற்றத்தை அறிந்தாலும் இதுபோல் தன்னை அழித்துக்கொள்ளும் செயலை தடுக்கவும், அவர்களிடம் இருக்கும் கில்டி பீலிங் போக்கி மறுபடியும் நார்மல் வாழ்க்கை வாழ வைக்கலாம். அப்படி இல்லாம போனா உங்க பொண்ண மாதிரியோ இல்லைனா வேறுவிதமாவோ அவங்க வாழ்க்கை மாறிடும், ஏன்னா பாதிப்பு உடலுக்கும், மனசுக்கும் சேந்தது.”

“அப்போ எங்க பொண்ணுக்கு…..” மேலே எப்படி கேட்பேன்? என்னவென்று கேட்பேன்?

“இப்போ நீங்க கவலைப்பட தேவையில்லை. உங்க பொண்ணுக்கு தேவையான ட்ரீட்மென்ட், உடம்புக்கும் மனசுக்கும், தந்துட்டுதான் விடுவோம். இப்போவே எங்க டாக்டர் உங்க பொண்ணுகிட்ட பேசவேண்டிய விதத்துல பேசினதுல உங்க பொண்ணு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியும் எதிர்காலத்தை பத்தி கவலையில்லை, இப்போதாவது சரியான ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டோமே. கொஞ்சம் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. அவங்களே உங்க பொண்ண பாக்க கூப்பிடுவாங்க” என்று எங்களை வழியனுப்பினார்.

குடும்ப பாரம்பரியம், சமூகத்தில் நல்ல நிலைமை என்ற வெறும் வறட்டு பெருமைகளுக்கு மதிப்பளித்து உண்மையான மனிதனையும் வக்கிரத்தையும் அடையாளம் காணமுடியாமல் கொடுத்த விலை மிகப்பெரியதே. எதையெதையோ அறிந்துக்கொள்ள முயலும் நாம் முக்கியமானதை அறிய தவறிவிடுகிறோமோ?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book