13

அன்றும் அப்படித்தான், நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட செய்தியில் மனம் அதிர்ந்து சொல்ல முடியா துயரத்தில் மனது அழுத்தியது,

“படுபாவிங்க நாசமா போக..பச்ச மண்ண கூட விட்டு வெக்காத காவாலி பயலுக பாடையில போக…”

என்ற ஒப்பாரி குரல்கள் வெவ்வேறு மக்களிடம் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தாயாக என் மனம் பரிதவித்தது.

அதுவும் பெண் பிள்ளை தாய் தந்தையுடன் இருந்தாலும், இல்லை விடுதியில் இருந்தாலும் பாதுகாப்பு சிறிதும் இல்லாத நிலையில் என்ன செய்ய?

எங்க தப்பு நடந்துதுன்னு யோசிச்சா நீ, நான், நாம், நம் குடும்பம், நம் சமூகம், நம் கல்வி… இப்படி நீளமான சங்கிலித்தொடர் கண்ணிகள் போய்க்கொண்டேயிருக்கிறது.

இன்று எங்கோ, யாருக்கோ நடந்தது நாளை நம் பிள்ளைக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்?

“யம்மா. யம்மா” என்று என் வீட்டில் வேலை செய்யும் அன்பரசியின் குரல் என் சிந்தனையை வலையை அறுத்தது.

“என்ன அன்பு. உன் பொண்ணு இன்னிக்கி ஸ்கூல் போகலையா?” என்று கேட்டேன். ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் செல்லும் பெண். நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண், அதற்கு உறுதுணையாக அன்பும் அவள் கணவனும்.

அப்பெண் கவலையாக “இல்ல..அம்மா இனி போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க.” என்று தன் தாயை பார்த்தாள்.

“என்ன அன்பு… என்ன திடீர்ன்னு இப்படி? அதுவும் நல்லா படிக்கற பொண்ணு..” என்று நான் கேட்கும்போது அப்பெண் நான் அவள் தாயுடன் பேசி எப்படியாவது அவளை மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி விடவேண்டும் என்ற ஏக்கத்தை கண்களின் தேக்கி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“பின்ன என்னாம்மா… உங்க வீட்டுல எத்தினி வருசமா ஜோலி செய்யறேன். என்கிட்ட இருக்குறது என்னோட கை சுத்தம், நாயம், பொய் சொல்ல மாட்டேன், செய்யற வேலைய சுத்தமா மனசார நல்லா பண்ணனும்ன்னு செய்யுறேன்… சரி தானே?” என்றாள் அன்பு.

“அட, அதுதான் தெரியுமே, அதுனால தான இத்தன காலம் உன்ன வீட்டுல ஒருத்தியா நடத்தறோம்? இப்போ எதுக்கு இது. பேச்ச மாத்தாத. ..” என்று கேட்டேன்.

“நீயே நாயம் சொல்லு… எதுக்கு புள்ளைகள படிக்க அனுப்பறோம்? மனுசனா இருக்கற புள்ளைங்க இஸ்கோலுக்கு போனா அதுங்கள நல்ல வழி எடுத்து சொல்லி பக்குவமா அது அதுங்க எதுல நல்லா வளருமோ அத்த கண்டு பிடிச்சி நல்ல நிலைக்கு இட்டுகினு போகதானே?” என்று கேள்வி கேட்டாள்.

“ஆமாம்.” என்றேன்

“அதுங்க எங்கள மாதிரி அன்னாடங்காச்சியா இல்லாம நல்ல நெலமை வரணும்னு நெனக்கறது சரிதானே?” என்ற அன்பின் கேள்விக்கு என் வாய தானாகவே “ஆமாம்” என்றது.

“ஆனா, இப்போ என்னா நடக்குது? இஸ்கோலுக்கு போற பொண்ண நாசம் பண்ண படிப்பு சொல்லி தர வேண்டிய வாத்தியும், அங்க வேலை பண்ணுற ஆம்பிள்ளைகளும், பெரிய கிளாஸ்ல படிக்கற ஆம்பிள்ள பசங்களும் போட்டி போடற மாதிரி தானே இருக்கு?” என்று அன்பு கூறியதை என்னால் ஆட்சேபிக்க முடியாத நிலையில் தள்ளிய இன்றைய நிலையை எண்ணி வாய்கட்டி நிற்கும் நிலையில் இருந்தேன்.

“அது மட்டுமா… இது எல்லாம் பத்தாதுன்னு பொம்பள புள்ளய கெடுக்கலாம் தப்பில்ல; இல்ல ஒரு பொண்ணுக்கு இஷ்டம் இல்லாம கழுத்துல மஞ்ச கயித்த கட்டி இஸ்துகின்னு போனா அவ தான் பொண்டாட்டி, அவகூட படுக்கலாம் தப்பே இல்லன்னு கண்ட கஸ்மால கதைங்க புஸ்தகமாவும், டிவி சினிமாலயும் திரும்ப திரும்ப சொல்லி தருதுங்க. இதை எல்லாம் படிச்சும் பாத்தும் இத்த தானே தெரிஞ்சோ தெரியாமலோ கத்துகிதுங்க…”

“இந்த கேடுகெட்ட கதைங்கள நிசம்ன்னு நம்பி ஆம்பள பசங்களும் பொம்பள புள்ளங்களும் கெடுத்துகிட்டும், கெட்டுபோய்கிட்டும் இருக்குதுங்க.” என்று அன்பு அவள் அறிந்த வகையில் சுட்டிக்காட்டிய உண்மையை என்னால் மறுக்க முடியவில்லை.

“அதான், பேசாம என் பொண்ணு பத்திரமாவும் நல்ல மனுசியாவும் இருக்க உங்கள மாதிரி நம்பிக்கையான வீட்டுல வேலை செஞ்சி புழச்சிக்கட்டும்ன்னு இட்டாந்துட்டேன்.” என்ற அன்பிறகு நான் என்ன பதில் சொல்லுவேன். ஒரு தாயாக என் மனதில் இருப்பதை அவள் தைரியமாக வெளியே கொட்டிவிட்டாள்.

“என் பையன் முருகனைக் கூட நம்ப ராசு தம்பி மெக்கானிக் கடைல விட்டுட்டேன். இப்போ ஒழுங்கா இருக்கறவனும், அவன் இஸ்கோல் போற வழில இருக்கற டாஸ்மாக்ல பெரிய பசங்க வாங்கிட்டு போய் குடிக்குறத பாக்குறவன், நாளைக்கு அந்த தறுதலைங்களோட கூட்டு சேந்து டாஸ்மாக்கோ, இல்ல போத பக்கமோ, அதுவும் இல்லாங்காட்டி மத்த பொண்ணுங்கள கெடுக்கவோ, ஜாதி சண்டைக்கு போகவோ மாட்டான்னு சொல்ல முடியுமா. அதுக்கு பேசாம இப்போவே தொழில் கத்துகிட்டா அவன் பொழப்ப அவன் பாத்துப்பான். டர் டர்ன்னு இப்போ ஓடுற வண்டிங்க எப்படியும் இனி வரும் காலத்துல கூடத்தான் செய்யும், என்னா நான் சொல்லுறது சரியா?” என்ற போது இந்நிலை தொடர்ந்தால், எதிர் கால தீர்க்கதரிசி போல் சொல்லும் அன்பின் வார்த்தையை என்னால் மறுக்கவோ, இல்லை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்ற நம்பிக்கையோடோ எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன்…ஏனெனில், மாற்றம் வரவேண்டிய சங்கிலித்தொடரில் நான் ஒரு கண்ணியே!

என் மனம் இந்நிகழ்வுக்கு காரணமாகிய தனி மனிதன், குடும்பம், சமூகம், சமூக அமைப்புகள் ஆகிய கல்வித்துறை, நீதித்துறை, ஆரோக்கியம் – மன மற்றும் உடல்நலம் போன்றவற்றில் கட்டாயம் மாற்றம் தேவை என்று உணர்த்தியது. இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் தினந்தோறும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது…. ஆனால், சில சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களின் வெளிச்சத்தை பெறுகிறதே..இது ஏன்?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில்

“பாரு..நீயே நான் சொல்லுற பாயின்ட் கரீட்டா இருக்குதுன்னு ஒத்துகின்னு இருக்க.” என்ற அன்பை பார்த்து

“இதுக்கு எல்லாம் எது காரணம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றேன்.

“ம்கும்…நல்லா யோசிச்ச போ. யாரு பண்ணாங்கன்னு ஆதாரத்தோட நிரூபிச்சாலே தண்டனை கிடைக்குறது இல்ல. இந்த அழகுல யோசிச்சி யோசிச்சி நின்னுக்கிட்டு இருந்ததால தான் இம்புட்டு தூரம் நாரி போய் கடக்குது. முதல இந்த மாதிரி நாதிரி பயலுகளுக்கு கீழ வேலைக்கு ஆகாத மாதிரி பண்ணி விட்டுடனும். ஆனா, எவன் இதை பண்ணுவான், அதிகாரம் இருக்குற ஆளு வீட்டுல இந்த மாதிரி ஒன்னும் நடக்காது, அதுனால அவனுங்களுக்கு நம்ப படுற கஷ்டம் எங்க புரியுது.” என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தண்ணீரை குடித்துவிட்டு மேலும் தொடர்ந்தாள்

“தாலிக்கு தங்கம் குடுத்துட்டு அதை அறுக்க டாஸ்மாக் வெச்ச கதைய எவன் மாத்துவான்? அவனவன் கோடி கோடியா சம்பாதிக்க, இருக்கற ஜனங்க எக்கேடு கெட்டா என்னான்னு இருக்கானுங்க…இவனுங்க எல்லாம் பாடைல போக. கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு சாவறதுக்கு பேசாம ஒரேடியா எதையாவது கலக்கி குடிக்க குடுத்துடலாம். அப்போ ஒரேடியா காலி!” என்ற அன்பின் வார்த்தை என்றேனும் நடக்கலாம், இந்நிலை தொடர்ந்தால்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book