15

(மீத்தேன் வாயு – நிலக்கரி போன்றது

மீத்தேன் வாயு தேவையா அல்லது உணவு தேவையா? என்று யோசிக்கவேண்டிய கட்டாயம்தான் இக்கதை)

வருடம் 2020:

“ஐயா எப்படியாவது எனக்குக் கொஞ்சம் விலை கம்மியா தாங்கய்யா..வீட்டுல புள்ள குட்டிங்க படுற பாட்டை கண்ணால பாக்க முடியலை.” இப்போது அதிகம் விற்கப்படும் மாத்திரைக்குத் தான் இந்தக் கெஞ்சும் நிலை!

“அட போய்யா, உன் கூட ஒரே ரோதனையா போச்சு.. நாலு நாளா இங்கே சுத்திக்கிட்டு இருக்கறதுக்குப் பதிலா வேற ஏதாச்சும் பண்ணமுடியுமான்னு பாருப்பா.”

“புண்ணியமாப் போகுமுங்க. பாருங்கையா இந்தப் புள்ளைய” என்று வெறும் எலும்பிற்குப் போர்த்தியத் தோலோடு நிற்கும் இளைய மகனை முன்னிறுத்தியபோது,

“என் அப்பன் வீட்டுதா.. நான் விலையக் கம்மியாக் குடுக்க.. என்னத்தைச் சொன்னாலும், காட்டினாலும் நான் ஒன்னும் பண்ணமுடியாது. நான் உனக்காக பாவமும் புண்ணியமும் பாத்தா என்னைய வீட்டுக்கு அனுப்பிட்டு, காத்துகிட்டு இருக்கற கூட்டத்துல இருந்து ஒருத்தனை வெச்சிடுவாங்க. நான் வேணா ஒண்ணு பண்ண முடியும்.. ஒரு அட்டைய வேணா மாத்தி வெக்கறேன். நாளைக்குள்ள பணம் கொண்டுவந்தா உங்களுக்குத் தரேன். ஸ்டாக் தீரபோவுது. போங்க.. போங்க.. பணம் கொண்டு வாங்க” என்று அந்த மனிதனை விரட்டினாலும் மனதின் மூலையில் வேதனை கனத்தது, பசியும் பட்டினியும் எவ்வளவு கொடுமையானது.

“சார் @#$% மாத்திரை 20 பாக்கெட் தாங்க.” என்று கேட்ட அடுத்த நபரின் குரல் என் வேதனையை தற்காலிகமாக மறைத்தது.

“மன்னிக்கனும்.. 6 பாக்கெட்டுக்கு மேல குடுக்க முடியாதுங்க. எங்களுக்கு வாய்மொழியா ஆர்டர் போட்டிருக்காங்க. அப்புறம் ஆதார் அட்டை தாங்க.. அப்போதான் தர முடியும்.” என்றேன்.

“என்னப்பா அதுதான் கேக்கற விலைய கொடுத்து வாங்கறோமே, இப்போ இப்படி சொன்னா எப்படி.? சரி சரி 6 பாக்கெட்டு தாங்க. திரும்பவும் நான் எப்போ மறுபடியும் வாங்க முடியும்? இதுக்குக்கூட ஆதார் வேணுமா?”

“ஒரு 20 நாளைக்கு அப்புறம்தான் நீங்க அடுத்தது வாங்க முடியும். நாங்க என்னங்க செய்யறது, எங்களுக்கும் நசையான வேலைதான்.. இப்படி ஒவ்வொரு வாட்டியும் ஆதார் அட்டை பாத்து என்ட்ரி போட்டுக் குடுக்கறதுக்கு.”

இத்தனைக்கும் காரணமானது மக்களை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் வீற்றிருந்தது சிறிது கர்வத்துடன்..

கலிகாலத்தில் பசியை உணராமல் வைக்கும் மாத்திரைக்குத் தான் இப்போது ஏக மவுசு!

“ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டால் மூன்று நாட்களுக்குப் பசி தெரியாதுங்க.” என்று கூறியவாறு பணம் வாங்கிக்கொண்டு, கேட்டவருக்கு மருந்தைத் தந்துவிட்டு என் பசியை அடக்க மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு பின் அறைக்கு சென்றேன்.

மதிய உணவைக் கண்முன்னே கண்டும் மனம் அங்கில்லாமல் எங்கெங்கோ பறந்து பறந்து கேள்விக்கணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொண்டிருந்தது.

“என்ன நீ.. கையில சாப்பாட வெச்சிக்கிட்டு சாப்பிடாம யோசிச்சிக்கிட்டு இருக்க?” என்று மதிய சாப்பாட்டு நேரத்திற்காக கடையின் கதவை அடைத்துவிட்டு வந்தான் ராஜன்.

“ம்ம்ம் என்ன பண்ணறது? இன்னும் எத்தனை நாள் இந்த சாப்பாடு கிடைக்கும்ன்னு தெரியல?” என்றேன்.

“நீ ஏன் இப்போவே அதைப்பத்தியெல்லாம் யோசிக்கற? முதல்ல இருக்கறதை சாப்பிடுவியா…அத விட்டுட்டு.. நமக்கு இதுவாச்சும் இருக்கேன்னு சந்தோஷப்படு.”

“நீ சொல்லறதும் சரிதான். ஒரு பக்கம் இது என்ன வேலை? இந்த வேலையும் வேண்டாம்.. ஒரு மண்ணும் வேண்டாம்ன்னு தோணும். அதுவும் இப்போ ஏகப்பட்ட தேவையா இருக்கற புது மாத்திரைக்கு.. இன்னிக்கி வந்த மாதிரி ஆளுங்க கூடிக்கிட்டே போகறதை பாக்கும்போதே வயிறு கலக்குது.” என்றேன்.

“ஆமாம்ப்பா.. நீ சொல்லறதும் சரிதான். அந்த மாத்திரையைப் போடும்போது பசி உணர்வை அறியாமல் செய்வதும், அதை உட்கொள்ளாமல் இருக்கும்போது கூடுதல் பசி உணர்வைத் தூண்டி, தொடர்ந்து உணவை நாடவும்; உணவு போதுமானதாக இல்லாத பக்ஷத்தில், மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு மக்களை தள்ளுவது ரொம்ப கொடுமை. அதோட பக்க விளைவைப் பத்தி யாரு யோசிக்கறாங்க?” என்ற ராஜன் கூறிய உண்மை என் மனதோடு உடலையும் அமிலமாக பொசுக்கியது.

“எந்த ஒரு செயலோட விளைவுகளைப் பத்தியும் யோசிக்காதது தான் நாம்ப இப்படி அவதிப்படும் நிலைக்கு கொண்டுவந்திருக்கு.” என்று கூறும்போது சில வருடங்களுக்கு முன் நடந்த நாட்டுநடப்புக்களை ஒதுக்க முடியவில்லை.

வருடம் 2013:

பத்திரிகையில் வந்த கட்டுரை மூலம் அறிந்த “காவிரி படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்” டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதித்தது. 2010(ம் ஆண்டு) அனுமதித்த திட்டத்தைப் பற்றி மூன்று ஆண்டுகள் கழித்தே, அப்பகுதி மக்கள் அறியும் நிலை!

இத்திட்டம் மூலம், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் தொடங்கி அரியலூர் மாவட்டத்தில் ஜெயம்கொண்டம், தஞ்சாவூரில் திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூரில் வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் வரையில் உள்ள வளமான பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க, மத்திய அரசு…மக்களின் கருத்தையும் கேட்காமல், தகவலும் தெரிவிக்காமல் “கிரேட் ஈஸ்டன் எனெர்ஜி கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்திற்கு உரிமையைத் தந்தது. அதுவும் இங்கிருந்து மீத்தேன் வாயுவை குழாய் மூலம் கொண்டுசெல்ல அனுமதித்ததால், ஆழ்குழாய் கிணறுகள் இட்ட விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் மற்ற விவசாய நிலங்களும் பாதிப்படையும். இந்த அவலம் இத்துடன் முடியாது.. நிலத்தடி நீரும் பாதிப்படையும் என்பதால் விவசாயிகள் மட்டுமல்லாது அத்துறையில் சிறந்து விளங்கிய வல்லுனர்களும் ஒன்று கூடி விவசாயத்தைக் காக்க முயன்றனர்.

வருடம் 2020:

நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, ராஜனின் குரல் மீட்டது

அவன் பேசியது என் காதுகளில் விழவில்லை. “என்ன சொன்ன?” என்று திருப்பிக் கேட்டேன்.

“இப்போ இருக்கற அவல நிலைக்கு என்ன காரணம்?” என்று கேட்டான்.

“ஒன்றா ரெண்டா? அடுக்கிக்கிட்டே போகலாம். ‘காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்’ வரும்முன்பே விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய பல முக்கிய, வீரியமான, காரணிகளாக “காவிரி நீர் போதிய அளவு கிடைக்காததும், மாநிலத்தில் நீர் நிலைகளை பாதுகாக்காததும், பசுமைப் புரட்சி என்ற பெயரில் இயற்கை விவசாயத்தையும், நம் பாரம்பரிய விதைகளை அழித்து மட்டுமின்றி பூச்சிக்கொல்லி போன்ற வீரியமிக்க மருந்துகளின் உற்பத்தியாளர்களுடன் வல்லுனர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு முயற்சியில் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி இழந்தோம்.”

“அப்போ 1960-களில் இருந்தே சொந்த மக்களுக்கு சூனியம் வெக்க தொடங்கிட்டாங்களா?” என்ற ராஜனின் கூற்றை மறுக்க முடியுமா?

“அதுவும் உலகமயமாக்கல்.. அது இதுன்னு பேசத் தொடங்கினதுக்கு அப்புறம், சொல்லவே வேண்டாம். விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி – அப்படின்னா தொழில் வளர்ச்சிதான் அப்படிங்கற நிலைக்கு சிந்தனையில் ரொம்பவே தாழ்ந்துட்டாங்க. சில சமயம் சிந்திக்கறாங்களா அப்படின்னே சந்தேகம்தான்.”

“அவங்க சொல்லறது சரிதானே” என்று கண் அடித்த ராஜனை நான் புரிந்துகொண்டேன்.

“ஆமா ஆமாம். நீ சொல்லறதும் சரிதான். இப்போ இந்த மாத்திரைய தயாரிச்சி விக்கறவங்க யாருன்னு யோசிச்சாலே போதுமே. அந்த கம்பெனியில் யாரு யாருக்கு எல்லாம் பங்கு அப்படின்னு யோசிக்கற நிலைமையிலா மக்கள் இருக்காங்க. அவங்க ஒரு வேள சோத்துக்கு என்ன பண்ண? அப்படின்னு முழி பிதுங்கி இருக்காங்க.” என்றேன்.

“உணவுப் பாதுகாப்பு பத்தி யோசிக்க வேண்டிய நேரத்துல மீத்தேன் பத்தி யோசிச்ச அறிவு ஜீவிகள் யாரு? அந்த அறிவு ஜீவிகளை என்னன்னுதான் சொல்ல?” என்ற ராஜனின் கேள்வியில் நியாயம் இருந்தது.

“எந்த அறிவு ஜீவின்னு உனக்கு சந்தேகம் வேறயா? வீணாப் போற தானியங்களை பசி பட்டினியில் வாடும் மக்களுக்குத் தர மாட்டோம், எலிகள் கொழுக்கட்டும் அப்படின்னு சொன்ன ஆளுங்க தானே அவங்க..என்ன ராஜன்..இன்னும் புரியலையா? அதுதாம்ப்பா…. 2 கக்கூஸ் சரியாக்க 35 லக்ஷம் செலவு செஞ்ச நாலும் தெரிஞ்சவங்க, வல்லவங்க!” என்றேன்.

“இப்போவாச்சும் நம்ப விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணராட்டி எதிர்காலத்தில் அரிசிய, பருப்ப கண்ணுல பாக்கவே முடியாது. இப்போவே இதை எல்லாம் சாப்பிட வழியில்லாம மாத்திரைய முழுங்க வேண்டிய நிலைமை. விளைநிலமெல்லாம் விஞ்ஞானமா போச்சுனா நம்ம எதிர்கால சந்ததியினருக்கு இதெல்லாம் தான் முந்தி சாப்பிட்டோம்னு சொல்ற நிலை வந்தாலும் வரும்..ஏற்கனவே மழை, இயற்கை அப்படின்னு ஷோ தான் காமிக்கற நிலை வந்தாச்சு..இப்போ இதுவும் சேந்திடும்..அப்புறம் எல்லாருமே மெய்ஞானிகளா பசியைத் துறந்து வாழவேண்டியதுதான்..இல்லன்னா நட்டுக்கிட்டு சாக வேண்டியதுதான்.”

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book