18

காலிங்பெல் சத்தம் கேட்டு கைவேலை செய்துக்கொண்டு இருந்த நான் அப்படியே வைத்துவிட்டு ‘யாரு? இதோ வரேன்’ என்று கூறியபடியே வாயிலை நோக்கி ஓடினேன்.

‘ஓ, கற்பகமா. ஒரு நாலு முழம் தா. மல்லி ரெண்டும், கதம்பம் ரெண்டும். அப்புறம் கொஞ்சம் உதிரியும் போடு. குடிக்க தண்ணீர் கொண்டுவறேன்’ என்று கூறிவிட்டு சென்றேன்.

‘இந்தா மா.’ என்று என்னிடம் பூவை தந்துவிட்டு தண்ணீர் குடித்தாள்.

‘அம்மா, என் பொண்ணு வளைகாப்புக்கு நீங்க கட்டாயம் வரணும். இந்த வெள்ளிக்கிழமை வெச்சிருக்கேன்.’ என்று வெற்றிலையும் சிறிது பூவுமாக வைத்து என்னை கூப்பிட்டாள்.

‘இல்ல கற்பகம் நான் வரல, வந்தா நல்லா இருக்காது. நல்ல சேதி சொல்லியிருக்க இரு வரேன்’ என்று கூறி உள்ளே செல்ல இருந்த என்னை தடுத்து

‘நீங்க கண்டிப்பா வரணும். நீங்க வரலைன்னு சொன்னா எப்படி?’ என்று அவளுக்கு கோபம் வந்தது.

‘புரிஞ்சிக்கோ கற்பகம். உனக்குதான் தெரியுமே இந்த மாதிரி விசேஷங்களுக்கு நான் வரமாட்டேன்’ என்று கூறும்பொழுதே என் மனதில் புதைக்கப்பட்ட, பல்வேறு சம்பவங்களில் உண்டான ரணங்கள் ஆறாது மீண்டும்மீண்டும் இந்த நிமிடம் அனுபவிப்பதுபோல் என்னை வேதனையும், வலியும் உணரச்செய்தது.

‘ம்கும்..யாரு வீட்டு விசேஷத்துக்கு வரீங்க, எங்க வீட்டுக்கு. யாரும் உங்கள ஒன்னும் சொல்லமாட்டாங்க. நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சியிருக்கீங்க. என் பொண்ணு இன்னிக்கி இந்த நல்ல நிலைமையில இருக்கறதுக்கு நீங்களும் ஐயாவும் தான் காரணம்.’

நான் பதில் சொல்லாமல் இருந்தேன், என்ன பதில் சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? முடியவில்லையே? நானா வேண்டும் என்று இந்த வரம் வாங்கிக்கொண்டு வந்தேன்? எருதின் புண் காக்கைக்கு விருந்து. என் ரணம் யாருக்கு….

‘அம்மா, ரொம்பவும் யோசிக்காத. எதையும் எதிர் பாக்காம மனசால எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்கற பாரு, நீதான் வாழ்த்தனும், நீ தெய்வம் மாதிரி. மனசுலதான் தாயன்பு இருக்கணும். பெத்துட்டா மட்டும் போச்சா? பெத்துட்டும் மனசுல அன்பு இல்லேன்னா அவங்கதான் மலடு’

‘நான் கண்டிப்பா வரேன்’ என்றேன் எனக்கு தெளிவாயிற்று யார் மலடு என்று.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book