21

டிசம்பர் 1,

பெரிய தலைகள் எல்லாம் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி. டிசம்பர் 1

“டேய், சீக்கிரம் வாடா. ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டாங்க”. என்று சில மாணவர்கள் அந்த அரங்கை நோக்கி ஓடினர்.

“மச்சி அங்க நல்ல ஆங்கிள்ல்ல சீட்டுப் பிடிச்சி இருக்காங்க. வாங்கடா”

“ஹப்பா, நீங்களாம் எப்ப வந்தீங்க? எங்களுக்குத் தெரியும் நீங்க சீக்கிரமே வந்து நல்ல இடமா பாத்து வெச்சியிருப்பீங்கன்னு.” என்று பேசிக்கொண்டே இருந்தனர்.

“மலரு வரலையா அக்கா?” என்று கேட்டாள் கவிதா.

“இல்ல அவளுக்கு ஆள் வந்திருக்கு. அதுதான் அவள விட்டுட்டு நாங்க வந்தோம்.” என்றாள் ரமா.

“ஹும், வந்திருந்தா பாத்திருப்பேன். பாத்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த மாதிரி அப்பப்போ பாத்துக்கறதுதானே.”

இதெல்லாம் நடக்கும் பொழுது மேடையில் “மனிதனை அழிக்கும் நோய் எய்ட்ஸ். @#%^&*(“ என்று பேசிகொண்டிருந்தார்கள், பேச்சு முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் இருக்கும். அந்த அரங்கத்தின் இருக்கைகளை நிரப்பவும், தப்பித்தவறி பேசும் கருத்துக்கள் சென்றடையவும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பாலியல்தொழிலாளர்களும் சில தொண்டுநிறுவனங்களால் அழைத்துவரப்பட்டுத் தலை எண்ணிக்கை காண்பிக்க உதவியது.

“எலே, என்ன தூங்கற, முழிச்சிக்கோ” என்று இரவு பாலியல் தொழிலாளியாகப் பணிசெய்துவிட்டு வந்து இருக்கையிலேயே உறங்கும் கவிதாவை எழுப்பினாள் ரமா.

“ஆமாம் போ” என்ற கவிதா தொடர்ந்து “என்ன சொல்லிட போறாங்க, எய்ட்ஸ் வராம இருக்கணும்னா காண்டம் போட்டுக்கோன்னு சொல்ல போறாங்க. மத்தவங்களோட படுக்காதே அப்படின்னு சொல்லற மாதிரி சொல்லிட்டு இப்படிச் சொன்னா எவன் திருந்துவான். காண்டம் கம்பெனிகாரனுக்கு லாபம். உனக்கும் எனக்கும் என்ன லாபம், நம்ப தலையெழுத்து மாறப்போறதில்லை. மேடைல இளிச்சிக்கிட்டு இருக்கே அந்தச் சோளக் கொல்லை பொம்மை – அந்த தொண்டுநிறுவன தலைவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நம்பள தொட்டுதொட்டுப் பேசாமயிருக்கப் போறானா, இல்லை நம்ப கூட எவனும் படுக்காம இருக்கப்போறானா? காண்டம் போட்டுக்கிட்டு படுப்பான். அவ்வளவுதானே!” என்றாள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தண்டோரா கதைகள் Copyright © 2015 by விஜயலக்ஷ்மி சுஷில்குமார் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book